Monday, May 27, 2019

தமிழ் பாடப்புத்தகத்தில் திருநள்ளார் புரளி!

தமிழ் பாடப்புத்தகத்தில் திருநள்ளார் புரளி! பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக புரளிகளுக்கு எதிரான தளமாக You Turn செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான புரளிகளை நிரூபிக்கச் செய்து மக்களுக்கு புரளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

ஒருமுறை, திருநள்ளார் சனிபகவான் கோவிலில் வான் பகுதியில் சென்ற செயற்கைக்கோள் ஒன்று செயலிழந்து பிறகு மீண்டும் இயங்கி உள்ளது. இதற்கு காரணம் சனிக் கோளின் நீலநிறக் கதிர்வீச்சுகள் நேரடியாக கோவிலின் மீது பாய்வதே என நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம் தெரிவித்து உள்ளதாகப் புரளி  நம்மூர் சமூக வலைதளங்கள், செய்தித் தாள்கள், புத்தகங்கள் என எங்கும் பரவி இருந்தன.

ஆனால், திருநள்ளார் செயற்கைக்கோள் நிகழ்வு தொடர்பான எந்தவொரு தகவலையும் நாசா தன் இணைய தளத்தில் வெளியிட வில்லை. அப்படி நிகழ்வு நடந்ததாக அதிகாரப்பூர்வ செய்திகள் எங்குமில்லை. இதைத்தவிர, இஸ்ரோவைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் திருநள்ளார் பகுதியில் செயற்கைக் கோள் செயலிழந்தது தொடர்பான எந்தவொரு தகவலும் இல்லை என மறுத்து இருந்தார்.

புரளிகளின் உறைவிடமாக இருக்கும் சமுக வலைத்தளங்களில் புரளிகள் பற்றி காண்பது இயல்பான ஒன்றாக இருக்கலாம். ஆனால், குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகத்தில் தவறான தகவல்களை பதிவிட்டு பாடமாக எடுப்பது குழந்தைகளுக்கு தவறான வழி நடத்தலாக அல்லவா இருக்கும்.

இப்படி உண்மைத்தன்மை இல்லாத ஒரு செய்தியை பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர் என்ற செய்தி நமக்கு எட்டியது. நான்காம் வகுப்பின் தமிழ் பாடப் புத்தகத்தில் திருநள்ளார் கோவில் செயற்கைக்கோள் கதையை உண்மையாக நடந்ததாக  அச்சிட்டு பள்ளிகளுக்கும் விற்பனை செய்துள்ளனர்.

” மதுபன் எஜுகேஷனல் புக்ஸ் ” விகாஸ் பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் குழுமம் அச்சிட்டு வெளியிட்ட நான்காம் வகுப்பு தமிழ் அருவி புத்தகத்தில் இடம்பெற்ற தவறான செய்திகள் தொடர்பாக புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கோ.ஜீவிதா-வை You Turn  ஆசிரியர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த உரையாடலில், திருநள்ளார் சனிபகவான் கோவிலின் பகுதியில் செயற்கைக்கோள் கள் செயலிழந்தன என்ற செய்தியை எதன் அடிப்படையில் எழுதியுள்ளீர்கள், நாசாவின் ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா எனக் கேட்டதற்கு, இணையத்தில் படித்த தகவல்கள் என்றும், நாசாவின் தகவல்கள் இல்லை என்றும் பதில் அளித்தார். மேலும், தாம் செய்தித்தாள்களில் படித்தவை, இணையத்தில் பார்த்தவையே அவை என்று கூறினார்.

அதே கட்டுரையில் திருவண்ணாமலை சனிபகவான் கோவிலில் இருக்கும் சனீஸ்வரர் சிலையில் இருக்கும் குறியீடும், சனிக்கோளில் நாசா எடுத்தப் புகைப்படத்தில் அதே குறியீடு இருப்பதாக எழுதி உள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பியதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. ஏனெனில், அதற்கும் ஆதாரங்கள் இல்லை.

இந்த தவறான செய்திகள் இடம்பெற்ற தமிழ் புத்தகங்கள் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் இந்த புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆண்டிற்கான புத்தக அச்சிட்ட போதே இதனை மாற்ற முடியும் என்கிறார்கள். இந்த வருடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கும், அதனை பார்க்கும் மற்றவர்களுக்கும் அது தவறான தகவல் எனத் தெரியாமல் இருந்தால் உண்மை என்றே நம்பி விடுவார்கள்.

உடனடியாக பிழையுள்ள புத்தகங்கள் வழங்கப்பட்ட பள்ளிகளுக்கு இதனைப் பற்றி தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்குமாறு தனிப்பட்ட முறையில் கேட்க உள்ளோம். ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று காத்திருந்தது பார்ப்போம் !

No comments: