Tuesday, July 9, 2019

நட்பைத் தெரிந்தெடுப்பதில் கவனம் தேவை...

ஒரு முறை
ஆக்னஸின் நண்பர் கூட்டத்தில்
ஒரு
தீய சிந்தனைத் தோழி இருப்பதை
அவளது தாய் கண்டாள்.

அதை
மகளுக்குப் புரியவைக்க
அன்னை ஓர்
நடைமுறை விளக்கம் கொடுத்தாள்.

அன்னை
ஆக்னஸை அழைத்தாள்.
ஆக்னஸ் வந்தாள்
மேகம் கண்ட தோகை போல
அவள் விழிகள் விரிந்தன.

அவளுக்கு முன்னால்
ஒரு கூடை நிறைய
ஆப்பிள் பழங்கள் பளபளத்தன.

அன்னையின் கையில்
ஓர்
அழுகிய பழம்.

அன்னை அந்த அழுகிய பழத்தை
நல்ல பழங்களுக்கு நடுவே
கூடையில் வைத்தாள்.

ஆக்னஸ் குழம்பினாள்.

பூமாலையில் யாரேனும்
கருவாடு வைத்துக்
கட்டுவார்களா ?
கெட்டதைக் கீழே விட்டு விடலாமே
என்றாள்.

பரவாயில்லை.
இதை
உன் அறையில் பாதுகாத்து வை
நான்
பார்க்கச் சொல்லும் வரை
திறந்து பார்க்காதே என்றாள்.

ஆக்னஸ்
அன்னை சொல் தட்டியதில்லை.
தட்டவில்லை.

சில நாட்களுக்குப் பின்
ஆக்னஸ் அழைக்கப்பட்டாள்
கூடையை எடுத்து வா.
அன்னை சொன்னாள்.

ஆக்னஸ் எடுத்துவந்த
கூடையில்
ஆப்பிள்கள் எல்லாம்
அழுகிப் போயிருந்தன !

சில நாட்களுக்கு முன்னால்
அழகிய நிலை.
இப்போது அழுகிய நிலை.

வெளியே கொட்டு என்றாள்
அன்னை
கொட்டினாள் ஆக்னஸ்.

தாய்
மெதுவாய் பேச ஆரம்பித்தாள்.

பார்,
ஒரு கெட்டுப் போன ஆப்பிள்
ஒரு கூடை ஆப்பிளையும்
கெட்டுப் போக வைத்து விட்டது !

ஒரு கூடை
ஆப்பிள்கள் சேர்ந்து
ஒரு ஆப்பிளை
நல்ல ஆப்பிளாக்க முடியவில்லை.

இப்படித் தான்
நட்பும்.

தீய நட்பு
தூய உள்ளங்களையும்
துருப்பிடிக்க வைக்கும்
கீழ்ப்படிதலுள்ள மனங்களையும்
கீழ்த்தரமானதைச் செய்ய வைக்கும்.

எனவே
நட்பைத் தெரிந்தெடுப்பதில்
கவனம் தேவை.

ஆக்னஸின் கண்கள் விரிந்தன
உள்ளுக்குள்
அன்னை சொன்ன பாடம்
உறைத்தது.

No comments: