Thursday, May 7, 2020

நம்பிக்கையே வெற்றிக்கு வழி...

நம்பிக்கையே வெற்றிக்கு வழி வகுக்கும். எந்தவொரு செயலைச் செய்தாலும் முதலில் அச்செயலை நிச்சயம் நன்றாகச் செய்வேன் என்ற நம்பிக்கை மனதில் வேண்டும். மேலும் நாம் பேசும் போது மற்றவர்கள் நம் சொற்களை நம்பும் விதமாக நாம் பேச வேண்டுமெனில் நல்ல உதாரணங்களை மேற்கோள் காட்ட வேண்டும். உண்மையான சம்பவங்களை பேச்சின் இடையே கூற வேண்டும்.

நம் மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில் முதலில் நான் யார்? என் பலம் என்ன? பலவீனம் என்ன? என்று நமக்குள் நாம் கேட்க வேண்டும். நம்மிடம் அளவிறகு அதிகமான சக்தி உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு தன்னம்பிக்கை தான் ஒரே வழி.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள என்னால் முடியும்’, நான் நிச்சயம் வெல்வேன்’ என்ற எண்ணம் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். மனிதன் கடலில் மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாறைக்கு ஒப்பானவன். ஆம். மிதக்கும் பனிக்கட்டிப் பாறையில் சிறிய பாகம் மட்டுமே நீருக்கு மேல் கண்களுக்குத் தென்படும், பெரும் பகுதி தண்ணீருக்குள் மறைந்திருக்கும். ஒவ்வொருவரும் நிறையத் திறமைகளை மறைத்தும், மறந்தும் வைத்திருக்கிறோம். வெளியே கொண்டு வரவும் மறுக்கிறோம். ஏன்? ஏன் இந்த தயக்கம்? மாறுங்கள்! துணிந்து நில்லுங்கள். எது வேண்டுமானாலும் நடக்கலாம், கவலை வேண்டாம்; முயற்சியுங்கள்! வெற்றி நிச்சயம்.

இதைத்தான் சுவாமி விவேகானந்தர் தன் தொண்டர்களைப் பார்த்துக் கூறியுள்ளார். *‘நீங்கள் யாரும் செம்மறியாடோ, வெள்ளாடோ அல்ல நீங்கள் ஒவ்வொருவரும் சிங்கம்! எனவே துணிந்து நில்லுங்கள். பயம் வேண்டாம்’*. நம் திறமைகளைச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நாம் வெளிப்படுத்தவில்லையெனில் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது.

No comments: