Tuesday, May 5, 2020

வாக்கினிலே இனிமை வேண்டும்...

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. கேட்பவரை, மட்டுமல்ல கேட்க விரும்பாதவரையும், தன் வசப்படுத்த வைப்பதே சொல்லாகும்.இந்த சொற்கள் என்னசெய்யும்? சில சொற்கள் நம்மை வாழ வைக்கும். சில வீழ வைக்கும். சில அழ வைக்கும். கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. 'நெல்லைக் கொட்டினால் அள்ளிட முடியும். சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது'. 

வார்த்தைகளில் கவனம் வைத்தால் மட்டுமே வாழ்வு வளமாகும்.  கோபம் வரும் போது வார்த்தைகள் கடினமாகும். அந்த சமயங்களில் மவுனமாக இருப்பதே நல்லது. சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக இருக்க வேண்டும். பெரியவர்கள் பேசுவதைப் பார்த்து தான் குழந்தைகளும் கற்கிறார்கள்.எனவே சொற்களில் இனிமை வேண்டும். பாரதி இதைத் தான் வாக்கினிலே இனிமை வேண்டும் என்கிறான். 

ப்ளீஸ், சாரி,தேங்க்யூ என்ற சொற்களை சரியான சமயங்களில் பயன்படுத்த தெரிந்தாலே வாழ்க்கையை அழகாக கடக்க முடியும்.தன்னம்பிக்கை பயிற்சி ஒன்றில் மனச்சோர்வு அடைந்த ஒருவனிடம், கவலைப்படாதே நல்லதே நடக்கும் என்று பயிற்சியாளர் சொல்கிறார்.அதைக் கேட்ட மற்றொருவன் சிரித்துக்கொண்டே இப்படி சொன்னதினாலே, வெற்று சொற்களால் என்ன நடக்கப் போகிறது என்று ஏளனம் செய்கிறான். மகரயாழ்  உடனே அந்த பயிற்சியாளர் கேள்வி கேட்டவனை ,கடுமையான சொற்களால் திட்ட ஆரம்பிக்கவும், ஆத்திரமடைந்த அவன், அவரை அடிக்க கையை ஓங்கவும், அவர் அமைதியாக அவனை நோக்கி பார்த்தாயா,இது தான் சொல்லின் வலிமை. எனவே தான் சொல்கிறேன். நல்ல சொற்கள் நல்ல அதிர்வைத் தரும் என்றுகூறினாராம்.நல்ல சொற்கள் நம்மை வழி நடத்தும். கரை சேர்க்கும். நல்லா இருக்கணும் என்ற பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் நமக்கான உற்சாக மருந்தாகும்.

No comments: