Friday, May 1, 2020

ஏற்றமும் இறக்கமும்...

ஒரு காலக் கட்டத்தில் எப்படி வாழ்ந்தோம் இப்பொழுது இப்படி துன்பப்படுறோமே?ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது என்று பலர் சொல்வதைக் கேட்டு இருப்போம்.
ஏன் நாமே பல நேரத்தில் நமக்கு நாமே எண்ணி இருப்போம்..
பெரிய செல்வந்தராக இருந்தவர் இன்று கடனில் இருக்கலாம். இவ்வாறு திடீரென்று வாழ்க்கையானது மாறி நம்மை நிம்மதி இல்லாமல் செய்து இருக்கலாம் 

வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் இரண்டும் உண்டு. “நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

ஏற்றமும். இறக்கமும் எழுச்சியும், வீழ்ச்சியும் உலகத்தின் இயல்பு. அப்படி இல்லை என்று கருதுவது மரணமே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப்
போன்றது.

மரணம் இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருள் அற்றது. வாழ்க்கை என்றால் அதில் மரணமும் அடங்கி இருக்கிறது.

அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.

பரமபதம் என்ற விளையாட்டு வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது என்பதை நமக்கு உணர்த்திய ஒரு அற்புதமான விளையாட்டாகும்.

இன்பமும், துன்பமும், இலாபமும்,நட்டமும்,
வெற்றியும், தோல்வியும்,ஏற்றமும், இறக்கமும் இயற்கை விதிகள்..

வெற்றி,இலாபம், ஏற்றம், இன்பம் இவற்றை மட்டுமே மனிதன் எதிர்பார்த்துக் கிடைக்காமல் போனால் ஏமாற்றம் அடைகிறான்..

வாழ்க்கையில் துன்பம், தோல்வி, நட்டம்,இறக்கம் வந்தால் இவற்றை வாழ்வின் நியதி என்று நினைத்துத் துணிவுடன் மனம் தளராமல் எதிர்கொண்டால் வெற்றி அடையலாம்..

ஆம்.,நண்பர்களே..,

நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான நிகழ்வுகளை பழகக் கற்றுக் கொள்ளுங்கள். 

ஏனெனில், வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. 

ஆகையால், அனைத்து சூழல்களுக்கும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது.

No comments: