Saturday, June 20, 2020

மனம் உன்னை ஏமாற்றும்...

குமார் மளிகைக்கடைக்குப் போனான். மளிகை கடை முன்வரிசையில் புதியதாக வறுக்கப்பட்ட மொறுமொறுவென்று இருக்கக்கூடிய மஞ்சள் கலரில் பார்த்தவுடன் படக்கென எடுத்து இரண்டு பருப்பை வாயில் போடக்கூடிய அளவிற்கு மலர்ந்து இருக்கக்கூடிய பொட்டுக்கடலையை ஒரு டப்பாவில் கொட்டி வைத்திருப்பார் செட்டியார்.

 செட்டியாருக்கு தெரியும் யார் வந்தாலும் அந்த டப்பா முன்பு நின்று கொண்டு இரண்டு இரண்டு பொட்டுகடலை யாக நுனி விரலில் எடுத்து வாயில் போட்ட வண்ணம் தான்  வந்திருக்கும் கஸ்டமர் லிஸ்டை கூறுவார்கள் என்று.

 குமாரும் அப்படித்தான் தன் இரு விரலால் பொட்டுக்கடலை எடுத்து வாயில் போட்ட வண்ணம் செட்டியாரே அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு அரை கிலோ சாமான் லிஸ்டை சொல்லும்போது காக்க சோளம் வந்துருச்சா?

 வந்துவிட்டது என்று செட்டியார் கூறினார்.

குமார் வந்திருச்சா சரி சரி  அஞ்சு கிலோ போடுங்க செட்டியாரே. அவன் மகிழ்வாக  ஆடர் கொடுத்தபடி எவ்வளவு செட்டியாரை காக்கா சோளம்?

 விலை விலை என்ன விலை இந்த பொருளுக்காக எத்தனை தடவை கேட்டிருக்க. உனக்காக தான் வாங்கி வந்தேன். விலையை பத்தி என்ன இருக்கு தம்பி வாங்கிட்டு போ. 

 சரி செட்டியாரே போடு.செட்டியார் கடைசியாக பில் போட்டார். அவன் பையில் கைவிட்ட போது அவன் வைத்திருந்த இரண்டு 500 ரூபாய் நோட்டில் ஒன்று காணவில்லை. பதறிப் போனான்.
 அதன்பின் செட்டியாரிடம் சாமானை வாங்கி பணத்தை கணக்கு பார்த்து வீட்டுக்கு எடுத்துப் போவது இப்படி எதிலும் நாட்டமில்லாமல் செயல்பட்டான்.

 வீட்டிற்கு வந்த பிறகு அவன் மனைவி கேட்டாள் என்ன மூஞ்ச பாத்தா குட்டியை தொலைச்ச நாய்க்குட்டி மாதிரி இருக்கு.

 குமார் போடி உள்ள பெருசா வந்துட்டா வசனம் பேசிகிட்டு கோபப்பட்டான்.

 அன்று முழுவதும் 500 ரூபாய் காணாமல் போனது நினைத்து மனம் பிழிந்து, வாட்டி எடுத்தது.

சில நாட்களுக்குப் பிறகு செட்டியார் கடைக்கு சென்றான். வழியில் மிக சோகமாக ஒரு சிறுவன் கோயில் வாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

 ஏனோ தெரியவில்லை அவனிடம் சென்று பேசவேண்டும் போல் மனம் கூறியது. பக்கத்தில் போனான் இந்த வயசுல என்னடா இம்புட்டு சோகம்.

 அந்த சிறுவன் கூறினான் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு அண்ணா.

 அவன் கூறிய அண்ணன் என்ற வார்த்தை அவனை கரைத்து இருக்க வேண்டும் போலும்!

 அவனை இழுத்துக்கொண்டு செட்டியார் கடைக்கு போனான் அரிசி பருப்பு உப்பு புளி மிளகாய் கிட்டத்தட்ட 500 ரூபாய்க்கு சாமான்களை வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டு மீதமிருக்கும் 500 ரூபாயில் தன் வீட்டுக்கான பொருளை வாங்கிக் கொண்டு மிக மகிழ்வாக வீட்டிற்கு வந்தான்.

 அவன் மனைவி கேட்டாள் என்னையா உலகத்தையே காக்க உதித்த சூரியன் போல இவ்வளவு பளிச்சுன்னு வந்து நிக்கிற. அவன் சிரித்துக்கொண்டே உள்ளே சென்று விட்டான்.

 அவன் மனைவி சாமான்களை எடுத்து டப்பாவில் கொட்டியபடி என்ன ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு போன 500 ரூபாய்க்கு தான் ஜாமான் இருக்கு. அவன் மகிழ்வோடு கூறினான் நடந்த கதையை.

அப்போது அவன் மனைவி கேட்டாள் போனமுறை செட்டியார் கடைக்குப் போனபோது 500 ரூபாய் தண்டம். இப்போது செட்டியார் கடைக்குப் போனபோது 500 ரூபாய் தண்டம்.

 இனிமே 500 ரூபாய் மட்டும் எடுத்துட்டு போ போதும். 

அவன் கோபமாக போன முறையை நடந்த விஷயம் இந்த முறை நடந்த விஷயம் இரண்டுக்கும்  வித்தியாசம் இல்லையா?

 அவன் மனைவி சொன்னாள் என்ன வித்தியாசம் மொத்தத்துல குடும்பத்துக்கு 500 ரூபாய் நஷ்டம்.

குமார் யோசிக்க ஆரம்பித்தான் போன முறையும் 500 ரூபாய் நம்மை விட்டுப் போனது! இந்த முறையும் 500 ரூபாய் நம்மை விட்டுப் போனது!

 அவள் சொல்வது சரிதான் நாம் ஏன் அப்போது கவலை கொண்டு. இப்போது இன்பம் கொள்கிறோம்.

குமார் ஒன்றைப் புரிந்து கொண்டான்.

 "மனம் நம்மை ஏமாற்றுகிறது".

No comments: