Saturday, March 17, 2018

நம்மை விட்டு போகாத மைனஸ் பாயிண்ட்.

சில சமயம் நம்மை சட்டை செய்யாத சமூகத்திற்காக வெட்கப்பட்டுக் கொண்டிருப்போம்.
ஒருமுறை கிண்டியில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தேன்.
வடபழனி ஏவிஎம் தியேட்டர் பிரியும் ரோட்டு சிக்னலில் இறங்குவதாக நினைத்துக் கொண்டு அதற்கு முந்தைய சிக்னலில் இறங்கிவிட்டேன்.
இறங்கியதும் தவறைக் கண்டுபிடித்து விட்டேன். ஆனாலும் திரும்ப பஸ்ஸில் ஏற வெட்கமாய் இருந்தது.
’பஸ் சமூகம்’ என்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக நானே நினைத்துக் கொண்டேன்.
நான் தவறாக இறங்கவில்லை. சரியாகத்தான் இறங்கியிருக்கிறேன் என்று அவர்களுக்கு காட்ட விரும்பினேன்.
அப்படியே இடது பக்கம் ரோட்டில் நடந்து சென்று யாருக்கோ காத்திருப்பது மாதிரி நின்றேன். அந்த பஸ் கிளம்பியதும் பஸ் போகும் நேர் வழியில்தான் நான் போகப்போறேன்.
ஆனால் அதை உடனே செய்தால் பஸ்ஸில் உள்ளவர்கள் “பாரு பெரிய இவனாட்டம் டப்புன்னு இறங்குனான். இப்ப அப்படியே நடந்து போறான் பாரு” என்று பேசுவார்கள் என்று நானே நினைத்துக் கொண்டேன்.
பஸ் போகும் வரையில் மொபைலை நோண்டிக் கொண்டே இருந்தேன். பஸ் போனதும் நடக்க ஆரம்பித்தேன்.
ஏன் வெட்கப்படுகிறோம். எதற்கு வெட்கப்படுகிறோம் என்று தெரியாது. ஆனால் அர்த்தமில்லாத வெட்கம் வந்து துன்புறுத்துவது பற்றி ஆச்சரியப்படுவேன்.
உலகத் திரைப்படவிழாவில் Mountains May Depart என்ற சீனப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் பிறகுதான் படம் பெயரைக் காட்டி டைரக்சன் என்று டைரக்டர் பெயரைப் போட்டார்கள்.
அதைப் பார்த்த ஒவர் ஸ்மார்ட்டான ஆட்கள் படம்தான் முடிந்து விட்டதோ என்று நினைத்து சட்டென்று சீட்டைவிட்டு எழுந்துவிட்டார்கள்.
அரைநிமிடத்தில் படம் முடியவில்லை தொடர்கிறது என்று தெரிந்ததும், சட்டென்று எழுந்தவர்களில் பாதி நபர்கள் உட்கார்ந்து படம் பார்த்தார்கள்.
இன்னும் கொஞ்ச பேருக்கு ஈகோ பிரச்சனையாய் இருக்கலாம், வெட்கமாய் இருந்திருக்கலாம்.
எழுந்தது எழுந்தபடி அப்படியே வெளியே போய்விட்டார்கள். தங்கள் வெட்கத்தால் நல்ல திரைப்படத்தை இழந்துவிட்டார்கள்.
ஒருமுறை நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு கல்லூரி மாணவன் சைக்கிள் பின்பக்கம் பெரிய கவரில் தோசை மாவை வைத்து பிடித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான்.
சிறிய பள்ளத்தில் ஏறி இறங்கும் போது கைநழுவி பாலத்தீன் கவர் பொட்டிப் போயிற்று.
மாவோடு கவர் விழுந்ததைப் பார்த்து அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. அப்படியே போட்டு விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வேக வேகமாக போய்விட்டான்.
பின்னால் வந்த இரு பெண்கள் “தம்பி மாவு தம்பி மாவு “ என்று கத்தினார்கள்.
அவன் அதை கவனிக்கவில்லை.
அப்பெண்கள் அருகில் இருந்த மளிகைக்கடையில் இரண்டு பாலத்தீன் கவர் வாங்கி அந்த உடைந்த கவரை தூக்கி அதில் பகிர்ந்து எடுத்துக் கொண்டார்கள்.
கிட்டத்தட்ட 80 சதவிகித மாவு நல்ல நிலையில்தான் இருந்தது.
அழகா நாலு பேரு தோசைச் சுட்டு, வெங்காயச் சட்னி வெச்சி திங்கலாம்.
யாராவது பார்த்து கிண்டல் செய்வார்களோ என்று வெட்கம்.
கற்பனை செய்து கொண்டவற்றைப் பற்றிய வெட்கம்.
எப்போதும் வெட்கம். தேவையில்லாத கூச்சம்.
இதுதான் நம் பெரிய மைனஸ் பாயிண்ட்.
எப்போதும் நம்மை விட்டு போகவே போகாத மைனஸ் பாயிண்ட்.
                  - Vijay Baskar 

No comments: