Sunday, April 15, 2018

மன்னித்து விடு ஆசிஃபா... சபிக்கப்பட்ட மண்ணில் பிறந்து விட்டாய்...

அன்றைக்கு ஆசிஃபா தன் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர்.

காவல்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன் அந்த புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்கு சென்று காவல்துறை விசாரித்துள்ளனர்.

அப்போது சஞ்சீவ் ராம்,"நான் அந்த சிறுமியை பார்க்கவே இல்லை " என்று கூறி இருக்கின்றான்.

காவல்துறை அதிகாரி கூறுகையில், "விசாரிக்கும் நேரத்தில் கோவில் பூட்டப்பட்டிருந்தது. சஞ்சீவ் ராம் ஆசிஃபாவை கோவிலின் உள்ளே ஒரு மேஜைக்கு அடியில் பிளாஸ்டிக் பாய்களைக் கொண்டு மறைத்து வைத்திருந்திருக்கின்றான்".

"சஞ்சீவ்ராம் மற்றும் எட்டு பேர்கள் கொண்ட கும்பல் அவளின் கழுத்தைப் பிடித்து தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அவளை அருகில் உள்ள ஒரு கோவிலில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள்."

"அதன் பின் அடுத்த மூன்று நாட்களுக்கு அவளை தொடர்ந்து  மாறி மாறி கற்பழித்துள்ளனர்.கடைசியாக அவள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள்..

மறுநாள், ஆசிஃபாவின் சிதைக்கப்பட்ட உடல் அந்தக் காட்டுப்பகுதியில்  அதே ஊதா நிற உடையில் இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது..

புலனாய்வுத் துறையினர் கூறியதில்..

"அவர்கள் ஆசிஃபாவை கற்பழித்ததற்கான நோக்கம் அவளின் நாடோடி சமூகத்தின் மீது இருந்த வெறுப்புணர்வே ஆகும்.

"இந்த வழக்கு சம்பந்தமாக எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் இருவரை வழக்கில் இருந்து விடுவிக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 15 வயது சிறுவன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையின்  மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு 19 வயது இருப்பதாக கூறுகின்றனர்.

பலவீனமான ஒரு சிறுமியை மிருகக் குணம் கொண்ட சில ஆண்கள் அரங்கேற்றிய கற்பழிப்பு வன்முறை  தேசத்தில் பாலியல் வன்முறைகளின்  மாற்று முகத்தை காட்டியுள்ளது.

ஆசிஃபாவின் நாடோடி சமூகமான  பக்கர்வால் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் ஆவர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவு தந்து காப்பாற்ற இந்து அமைப்பினர் பலர் போராடுகின்றார்கள். ஆனால் ஆசிஃபாவிற்கான நீதியைப் பற்றி அவர்கள் கவலைக் கொள்ளவில்லை. இதுதான் இந்தியாவின் மனுநீதி உருவாக்கியுள்ள பாகுபாடான சமூக நீதி ஆகும்.

இங்கு ஒன்றை குற்றமா, இல்லையா என பொது சமூகம், அரசு, நீதிமன்றம் என அனைத்துமே சம்பந்தப்பட்டவரின் சாதி, மதம் சார்ந்தே தீர்மானிக்கும்..

தற்போது ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் பரவி வருகின்றன. சிறிய நகரமான கத்துவா பகுதி போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டது. இந்த நகரம் ஆசிஃபா கொல்லப்பட்ட பகுதியை ஒட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வருத்தம் என்னவென்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டங்களும் பரவி வருவதுதான்.. இதில் பெண்களும் பலர் கலந்து கொண்டு குற்றவாளிகளை ஆதரிப்பது கொடூரமான உளவியல்..

"பக்கர்வால் சமுதாய மக்கள் எங்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறுவதோடு, குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவிக்காவிட்டால் "தீக்குளிப்போம்" என்றும் கூறுகின்றனர்.

மத வெறுப்பு, அதிகாரம், ஆணாதிக்கம் என அனைத்தும் கொல்லப்பட்ட ஆசிஃபா விஷயத்தில் நீதிக்கு எதிராக ஒன்று சேர்ந்து கபட நாடகமாடுகின்றன..

நிர்பயா, நந்தினி, ஹாசினி, வேலம்புதூர் சிறுமி, தற்போது ஆசிஃபா என பல்லிளிக்கிறது நம் தேசத்தின் ஆன்மா..

நீதிக்கான முனகலை எங்கிருந்து, எப்படி தொடங்குவது?

No comments: