Tuesday, April 17, 2018

நிர்மலாதேவி கைதும் ஆளுனரின் வேகமும்

நேற்று ஐந்து மணி நேரம் காவல் துறை அதிகாரிகள் நிர்மலாதேவியின் வீட்டு முன்னால் காத்து கிடந்தார்கள். சுமார் நூறு காவலர்கள் இருப்பார்கள். அவர்களில் பெண் காவலர்களும் அடங்குவர். ஐந்து மணி நேரத்துக்குப் பின்னால் காவலர்கள் நிர்மலாவை கைது செய்யாமல் பின் வாங்கினார்கள் என்ற தகவல் வந்தது.
பிறகு கதவை உடைத்து நிர்மலாவை போலீசார் கைது செய்தார்கள். நிர்மலாவை கைது செய்ததில் காட்டப்பட்ட ஒழுங்கு நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. போலீஸ் ஐந்து மணி நேரம் நிர்மலாவுக்கு காவல் இருந்தார்கள் என்று சொல்லலாம். அதாவது ஊடகங்களோ அல்லது வேறு யாருமோ நிர்மலாவை அணுகி விடாமல் போலீசார் பாதுகாத்தார்கள். நிர்மலா வெளி உலகத்தாரிடம் எது குறித்தும் உளறிவிடக் கூடாது என்பதில் போலீசார் கவனமுடன் செயல்பட்டது புரிகிறது.
நிர்மலா கைது குறித்த எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகே நிர்மலாவின் வீடு உடைக்கப்படுகிறது. நிர்மலாவைக் கைது செய்த பின்னால் அவர் பத்திரமாக அதாவது ஊடகத்தின் கண்களில் சிக்கி விடாமல் கொண்டு செல்லப்பட்டார். மிக உயர்ந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஊடகத்திடம் குற்றவாளி முதல் முதலாக என்ன சொன்னார் என்பதுவும். தாங்கள் விரும்பியபடிதான் நிர்மலா பேச வேண்டும் என்று விரும்பிய ஒரு மேலிடம்தான் அவரை ஊடகத்திடம் பேசவிடாமல் செய்திருக்கிறது.
அந்த மேலிடம் யார்?
முதல் அமைச்சர், நிர்மலா குறித்து பேசுகிறார். அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார். அமைச்சர் தா.பா.பாண்டியராஜன் பேசுகிறார். ஆனால் கவர்னர் மட்டுமே நிர்மலாவை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்கிறார். ஏன்? நிர்மலா தனது 'தரகு' பேச்சில் கவர்னரைக் குறிப்பிடுகிறார். அவரைக் குறிப்பிட்டு-- 'என்னால் எதையும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை வந்த பின்னால்தான் இதில் இறங்கினேன்"-- என்று அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார்.
கவர்னர் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாலும் அது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் நிர்மலா மீது விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவு இடுகிறார். எப்படி?
நிர்மலாவிடம் பேசாமல் அவரிடம் இருந்து சில தகவல்களைப் பெறாமல் வாய் திறந்துவிடக் கூடாது என்பதில் கவர்னர் குறிப்பாக இருக்கிறார் என்பது தெறிகிறது.
அதனால்தான், அதாவது நிர்மலாவிடம் இருந்து சில தகவல்களைப் பெறுவதற்க்காகவும் அதே நேரத்தில் அவருக்கு சில உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காகவுமே உடனடியாக, கவர்னர் ஒரு குழுவை அவசர அவசரமாக நியமிக்கிறார்.
தமிழ் நாட்டு தலைமை நிர்வாகியும் அதிகாரம் பெற்றவருமான எடப்பாடி எதுவுமே செய்யாமல் இருக்கும் போது முந்திக்கொண்டு கவர்னர் உத்தரவு இடுவது ஏன்?
கவர்னர் வேந்தர் என்பதால், பிரச்சினை கல்வித் துறையில் நடந்திருக்கிறது என்பதால் கவர்னர் ஒரு குழுவை தன்னிச்சையாக அமைத்தார் என்று வாதிக்கலாம்.ஆனால் கல்வித் துறைக்கென்று ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதையும் அவர் மூலமாகவே எந்த உத்தரவையும் இட வேண்டும் என்பதையும் ஆளுனர் மறந்து விட்டார் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
ஏனெனில், மாநில அரசின் நிர்வாகத்தை மேற்பார்வை இடுவதும் தேவை ஏற்பாட்டால் குறிப்பிட்ட அம்சங்களின் மீது அரசின் கவனத்தை குவிப்பதுமே ஒரு ஆளுனரின் பணி ஆகும். நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்வது அல்ல. நிர்மலா குறித்த பாலியல் வழக்கை ஆளுநர் ஏன் முழுதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறார்?
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ஒரு வழக்கில் ஆளுனர் பெயர் அடிபடும் போது ஆளுனர் அந்த வழக்கு விவகாரத்தில் இருந்து விலகி நின்று வழக்குக்கு ஒத்துழைப்பு தருவதுதானே நியதி? அதுதானே இயல்பு?
ஆனால், ஆளுனர் தசமே முன் வந்து விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த அளவுக்கு வெளிப்படையாக செயல்பட்டால் தன் மீது சந்தேகம் வரும் என்று கவர்னருக்கு தெரியாதா? தெரியும். ஆனால் அதை விட முக்கியமானது ஆதாரங்கள்.
அதாவது, சந்தேகங்களுக்கு பதில் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். ஏனென்றால் அவை வெறும் சந்தேகங்கள் மட்டுமே. ஆதாரங்கள் சிக்கி விட்டால் அவற்றில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.
நிர்மலாவிடம் இருந்து ஆதாரங்களைக் கைப்பற்றும் வேகம் மட்டுமே கவர்னரிட,ம் தெரிகிறது. எனவே சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிர்மலாதேவியை இயக்கிய அந்த மேலிடம் சாட்சாத் நமது கவர்னர்தான் என்பது தெள்ளத் தெளிவாக புலனாகிறது.

No comments: