ஒரு மனிதர் அதிகாலையில் எழுந்து தேவனை ஆராதிக்க ஆலயத்துக்கு சென்றார். செல்லும் வழியில் இடறி கீழே விழுந்துவிட்டார். தட்டுத்தடுமாறி எழுந்தவர் தம் ஆடையில் அழுக்கு படிந்ததால் மீண்டும் தன் வீட்டிற்குச்சென்று ஆடையை மாற்றிக்கொண்டு மீண்டும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டார்.
வழியில் அவர் தாம் விழுந்த அதே இடத்திலேயே மீண்டும் விழுந்துவிட்டார். திரும்பவும் எழுந்தவர் மீண்டும் தன் ஆடையை மாற்றும்படி வீட்டிற்குச் சென்று மாற்றிக்கொண்டு திரும்பவும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டார்.
அப்போது வழியில் ஒருவர் தம் கையில் விளக்குடன் நிற்பதைக் கண்டவர். 'யார் நீங்கள், ஏன் இங்கு கையில் விளக்குடன் நிற்கிறீர்கள்' என்று அந்த மனிதனிடம் கேட்டார்.
அதற்கு அந்த மனிதன், 'நீங்கள் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் இருமுறை கீழே விழுந்ததை பார்த்தேன்.ஆகையால் உமக்கு உதவுவதற்காக நான் இங்கு கையில் விளக்குடன் உமக்காக காத்திருக்கிறேன்' என்றான்.
ஆலயம் செல்ல புறப்பட்டவரோ, "ஐயா, தாங்கள் யாரோ, எவரோ எனக்காக உதவும்படி வந்திருக்கிறீரே.மிகவும் நன்றி" எனக் கூறினார். பின்பு இருவரும் ஆலயத்துக்குச் சென்றார்கள்.
ஆலயத்துக்குள் சென்ற விசுவாசமுள்ள மனிதர் தனக்கு உதவிய மனிதனை நோக்கி, "நீங்களும் உள்ளே வாருங்கள்! சிறிது உணவருந்திவிட்டு பின்பு தேவனை ஆராதிப்போம்" என்றார். அதற்கு அந்த மனிதன் மறுத்துவிட்டான். இவர் எவ்வளவோ சொல்லியும் அந்த மனிதன் உள்ளே செல்வதற்கு மறுத்துவிட்டான்.
இவரோ அந்த மனிதனை நோக்கி, 'ஏன் நீங்கள் உள்ளேவர மறுக்கிறீர்கள்' என்று கேட்டார்.அதற்கு அந்த மனிதன், "நான் தான் சாத்தான்" என்றான்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த விசுவாசமுள்ள மனிதர், "நீதான் சாத்தானா, பின் ஏன் நீ ஆலயத்துக்குச் செல்ல எனக்கு உதவி செய்தாய்" எனக்கேட்டார்.
அதற்கு சாத்தான்,"நான் உன்னை முதல்தரம் கீழே விழச் செய்தபோது நீ முறுமுறுக்காமல் உன் வீட்டிற்குச் சென்று ஆடையை மாற்றிவிட்டு மீண்டும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டாய். உன் விசுவாசத்தைக் கண்ட தேவன்,'உன் பாவங்களையெல்லாம் மன்னித்தார்'.
இரண்டாவதுமுறை உன்னை மீண்டும் அதே இடத்தில் கீழேவிழச் செய்தேன். ஆனால் அது உன் ஆர்வத்தை குறைக்கவில்லை. நீ மீண்டும் வீட்டிற்குச் சென்று ஆடையை மாற்றிக்கொண்டு ஆலயத்துக்குச் செல்ல புறப்பட்டாய். உன் பக்தி வைராக்கியத்தைக் கண்ட தேவன், "உன் குடும்பத்தாரின் பாவங்களையெல்லாம் மன்னித்தார்".
அதைக் கண்டு பயந்த நான், எங்கே நீ மூன்றாவது முறையும் கீழே விழுந்து மீண்டும் ஆலயத்துக்குச் செல்வதை தேவன் பார்த்து அதினிமித்தம் உன் தேசத்தாரின் பாவங்களை மன்னித்துவிடுவாரோ என பயந்துதான் "நான் தள்ளிவிடாமல் எங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்று உனக்கு உதவிசெய்ய கையில் விளக்குடன் வந்தேன்"என்றான்.
No comments:
Post a Comment