நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர்போன இந்திய ஆட்சிப் பணியாளர். திரு. சகாயம் அவர்கள் ஒரு மேடையில் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள் இவை (அவருடைய வார்த்தைகளில்)
“என்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் தாபல்துறையில் பணிசெய்துவிட்டு ஓய்வுபெற்ற அதிகாரி. ஒவ்வொருநாளும் அதிகாலை வேளையில் ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவது அவரது வழக்கம். ஒருநாள் அவர் ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வரும் வழியில் மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டார்.
அந்த வழியாகப் போனோர் வந்தோர் எல்லாம், அவர் குடித்துவிட்டுதான் ‘மட்டையாகி’க் கிடக்கிறார் என்று கடந்துபோனார்கள். உண்மையில் அவருக்கு குறைந்த இரத்த அழுத்தப் பிரச்சினை (Low Pressure) உண்டு. அதனால்தான் அவர் மயக்கம் போட்டுக்கீழே விழுந்திருந்தார். இது தெரியாமல் ‘அவர் குடித்துவிட்டுத்தான் கிடக்கின்றார்’ என்று எல்லாரும் கடந்தபோனதால், கவனிப்பாரற்று அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.
இன்னொரு முறை என்னுடைய தந்தை வேலை நிமித்தமாக தூத்துக்குடி சென்றிருந்தபொழுது, அங்கிருந்த பேருந்து நிலையத்தில் மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டார். மக்களெல்லாம், ‘இந்தாள் நன்றாகக் குடித்துவிட்டு இப்படிக் கிடக்கின்றார்’ என்று வாய்க்கு வந்தபடி பேசிவிட்டுக் கடந்துபோனார்கள். நேரம் ஆக ஆக என் தந்தை அவராகவே சுயநினைவு பெற்று வீடு திரும்பினார்.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், என் தந்தையும் சரி, என் வீட்டுக்குப் பக்கத்துக்கு வீட்டில் வசித்துவந்த பெரியவரும் சரி, வாழ்க்கையில் மதுவைத் தொட்டதே கிடையாது. ஆனாலும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இருவரும் மயக்கம் போட்டு விழ மற்றவர்களுடைய பார்வைக்குக் குடிகாரர்களைப் போன்று அவர்கள் தென்பட்டிருக்கிறார்கள். இப்படித்தான் பலரும் ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவர் இப்படித்தான் என்று தவறாகப் பேசுகிறார்கள். இத்தகைய போக்கை ஒவ்வொருவரும் தவிர்ப்பது நல்லது.
திரு. சகாயம் அவர்கள் சொன்ன இச்செய்தி நூற்றுக்கு நூறு உண்மை.
No comments:
Post a Comment