Monday, January 27, 2020

எல்லாம் நன்மைக்கே...

ஒரு விவசாயி இருந்தாருங்க...

அவர் நிலத்துல கோதுமை பயிரிட்டிருந்தாருங்க..

அந்த ஊருக்குள்ள மத்தவங்களோட நிலத்துல இருந்ததை விட இவர் நிலத்துல பயிர் செழுக்கா இருந்தது..

'ம்! உனக்கென்னப்பா விளைச்சல் அமோகமா இருக்குது, எங்களை சொல்லு!' அப்படின்னு அவர்கிட்டயே சொல்லி பொறுமினாங்க..

அதை அவர் காதுல போட்டுக்கல..

அறுவடை சமயம்..

வழக்கம் போல மலையோரம் இருக்கற தன்னோட நெலத்துக்குப் போறார், பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகறார்..

நிலத்துல நான்கு காட்டுக் குதிரைங்க வெளைச்சல நல்லா மேயறதோட மிதிச்சி நாசம் பண்ணிட்டு ஓடிப்போகுதுங்க..

மத்தவங்க எல்லாம் வந்து 'ச்சே! பாவம்பா நீ, உனக்குப் போய் இப்படி ஆயிடுச்சே' ஏதோ கெட்ட நேரம் போல'ன்னு ஆறுதல் சொல்றாங்க..

"யாருக்குத் தெரியும் இது நல்லதா கெட்டதான்னு, அதை நாம எப்படி முடிவு பண்ண முடியும்" அப்படிங்கிறாரு..

ஏதோ ஆறுதலா பேசினா, ஏத்தத்த பாரு இவனுக்குன்னு நெனைச்சிகிட்டாங்க அவங்க..

மீதிய அறுவடை செய்றாரு, மறுபடியும் கோதுமை பயிரிடறார்..

இந்த முறையும் நல்ல விளைச்சல்..

அறுவடை சமயம்..

வழக்கம் போல காட்டுக் குதிரைங்க கூட்டமா வந்து தின்னுட்டு நாசம் பண்ணிட்டு போகுதுங்க...

மத்தவங்க வழக்கம் போல ஆறுதல்?!! சொல்றாங்க..

இவரோ வழக்கம்போல "நங்லது கெட்டதுன்னு நாமா எப்படி முடிவு பண்ண முடியும்" அப்படிங்கிறார்..

அவங்களுக்கோ எரிச்சல்..

மறுபடியும் அசறாம பயிறிடறார்..

மத்தவங்க இவரோட திமிர்தனத்தை கிண்டலடிக்கறாங்க..

குதிரைங்க சாணம் போட்டுட்டு போன நெலம் இல்லையா? முன்னைய விட இன்னும் அமோகமா தளதளன்னு இருக்கு கோதுமை...

எல்லாருக்கும் பொறாமை ஒருபக்கம், எப்படி இருந்தாலும் இதையும் குதிரைங்க விடப்போறதில்லைன்னு நெனப்போட எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க..

இந்த முறை வந்தது ரொம்ப பெரிய குதிரைக் கூட்டம்..

மத்தவங்க எல்லாம் 'இவனுக்குத் தேவைதான்,  எதுக்கும் வியாக்கியானம் பேசுவானில்ல' அப்படின்னு உள்ளுக்குள்ள சந்தோஷப்பட்டாங்க..

இப்போ அந்த விவசாயியோட மகன் புத்திசாலித்தனமா ஒரு காரியம் செய்யறான்..

குதிரைங்க நிலத்துல மேய்ஞ்சிகிட்டு இருக்கும் போது நெலத்தைச் சுத்தி பெருசா வேலி போட்டுடறான்..

குதிரைங்களும் அடிக்கடி வந்து போன பழக்கத்தாலயும், நல்ல தீவனம் கெடைச்சதாலயும் மொரண்டு பண்ணாம அங்கேய தங்கிடுதுங்க..

வழக்கம்போல மத்தவங்க "உனக்கென்னப்பா கொஞ்சம் கோதுமை வெளைய வெச்ச இப்ப கொள்ளையா குதிரைங்களை வித்து கோடிகோடியா அள்ளப் போற" அப்படிங்கறாங்க..

அதையெல்லாம் அவர் கணக்குல எடுத்துக்கல..

அவர்கிட்ட நல்ல ஜாதிக் குதிரைங்க இருக்கறது தெரிஞ்சி அந்த நாட்டோட அரசன் மொத்தத்தையும் படைக்காக வாங்கிக்கறார்..

குதிரைங்களோ அந்த விவசாயியோட பையனோட பழகினதால அதுங்கள பராமறிக்கறவங்களுக்கு தலைவனா அவனை நியமிக்கறார்..

இதுக்கு நடுவுல இளவரசிக்கு குதிரையேற்றம் கத்துக்கொடுக்கிற வேலை இவங்கிட்ட வருது.

பழக்கம் காதலா மாறுது..

இந்த சமயத்துல விவசாயியோட மகன் குதிரையிலிருந்து விழுந்து காலை முறிச்சிகிட்டு வீட்டோட இருக்கான்..

இப்படி இருக்க, பக்கத்து நாட்டு ராஜா இந்த நாட்டுமேல படையெடுக்கறான்..

அதனால வீட்டுக்கு ஒரு ஆண்மகன் படையில சேரணும்னு உத்தரவு..

மத்தவங்களோட பிள்ளைங்க எல்லாம் யுத்தத்துல கலந்துக்கிட்டு அடிபட்டு கொஞ்சம், உயிரிழந்தது கொஞ்சம்னு நிலமை ஆகிடுது..

யுத்தத்துல ஜெயித்தாலும் அந்த நாட்டோட இளவரசன் மரணமடைந்துடறான்..

இப்போ அரச பதவிக்கு வாரிசான இளவரசியின் கணவனா வர்றவன்தான் அரசன்னு முடிவாகுது..

இளவரசியோட விருப்பப்படி விவசாயிட மகன் அவளை மணந்து அரசனாகிறான்..

வழக்கம் போல இப்பவும் சொல்றார் "நல்லதா கெட்டதான்னு நடக்கிற எதையும் நாம தீர்மானிக்கிறத விட்டுட்டு எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துகிட்டு நம்ம கடமைய செய்யணும்"..

கடமையை சரியாக செய்வோம் பலனை இறைவன்  பார்த்து கொள்வார் நமக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும்...

No comments: