மேற்கு வங்காளத்தில் வித்யாசாகர் என்றோர் அறிஞர் இருந்தார். பெயருக்கு ஏற்றார் போல் அவர் கல்விக் கடலாக விளங்கினார்; அவரிடம் பேசுவதை மக்கள் பெருமையாக நினைத்தார்கள். ஒருநாள் அவருடைய தலைமையில் சொற்பொழிவாற்றும் அறியதோர் வாய்ப்பு ஓர் இளைஞனுக்குக் கிடைத்தது.
பகட்டாக ஆடையணிந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு இருப்பூர்தியில் (இரயில்) வந்து இறங்கினான் அந்த இளைஞன். கையில் வைத்திருந்த பெட்டியைத் தூக்கிச் செல்வது அவனுக்கு மிகவும் இழிவாக இருந்தது. எனவே, அவன் கூலியாளைத் தேடினான். அவன் நேரத்திற்கு, கூலியாள் யாரும் அங்கு கிடைக்கவில்லை.
அவன் இவ்வாறு தவிப்பதைப் பார்த்த பெரியவர் ஒருவர், “ஏதேனும் உதவி வேண்டுமா?” என்று கேட்டார். “இங்கு கூலியாள் யாரும் இல்லை... அதனால் இந்தப் பெட்டியை அரங்கம்வரை தூக்கி வரவேண்டும்” என்றார். “அவ்வளவுதானா...” என்ற அவர், “நானும் அங்குதான் செல்கிறேன்... உன்னுடைய பெட்டியை நான் தூக்கிகொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு அரங்கம் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
சிறிதுநேரத்தில் இருவரும் அரங்கத்தை அடைந்தார்கள். அப்பொழுது பெட்டியைத் தூக்கிவந்த அந்தப் பெரியவரை அங்கிருந்த எல்லாரும் மாலை மரியாதையோடு வரவேற்று மேடைக்குக் அழைத்துச் சென்றார்கள். அதன்பிறகுதான் அந்த இளைஞனுக்குத் தெரிந்தது, அவர் வித்யாசாகர் என்று.
உடனே அவன், ‘எல்லாரும் போற்றி வணங்கும் அறிஞர் பெருமகனாரையா இப்படி வேலை வாங்கினேன்... பெரிய தவறு செய்துவிட்டேனே’ என்று, அவருடைய திருவடிகளில் விழுந்து, “ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று மன்னிப்புக் கேட்டான்.
அவனைத் தூக்கிய அவர், “இளைஞனே! வருந்தவேண்டாம்.... பிறர் துன்பப்பட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது... அதனால்தான் உன்னுடைய துன்பத்தைப் போக்க உதவிசெய்தேன்” என்றார்.
எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்ட வித்யாசாகர் சாதாரண ஒரு பணியாளரைப் போன்று பணிசெய்தது நமக்கு வியப்பாக இருக்கின்றது.
No comments:
Post a Comment