கிட்டத்தட்ட 70 வயதிருக்கும் அவருக்கு....
*
என்னோடு உள்ளாகரம் குமரன் தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் ஏறி, எனதருகே அமர்ந்தார்.
*
பளிரென நரைத்தும், கொஞ்சம் கூட கொட்டாத தலைமயிர்கள்.
*
உழைப்பின் மூலம் உறுதியடைந்த தேகக்கட்டு, பழைய வார் செருப்பு.
*
அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுக்கு தெளித்த வேட்டி, சட்டையுடன், கையில் சுருட்டி வைத்திருந்த தஞ்சை மஹாராஜா துணிக்கடையின் மஞ்சப்பை.
*
கோயம்பேடு போகும்லய்யா என்றார் என்னிடம். போகும் தஞ்சாவூருங்களா? என்றேன். ஆமாய்யா, பயவூட்டுக்கு வந்துட்டு போறேன் என்றார்.
*
நீயும் தஞ்சாவூராய்யா என்றவரிடம் தலையாட்டிவிட்டு, பையன் என்ன பண்றாப்ல என்றேன்.
*
இங்க தான் ஏதோ மார்பில்ஸ் கம்பேனி வச்சுருக்குறான். ஊர் பக்கமே வரமாட்டங்கிறான்.ஏதோ பாக்கனும்போல இருந்துச்சு. ஆதான் ரெண்டு நாளைக்கு முந்தி வந்தேன்.
*
பேரன், பேத்திகள கண்ணாற பாத்துட்டு,இப்போ போறேன் என்றவரிடம் ஒரு ஏக்கம் தெரிந்தது.
*
ரெண்டு பொம்பளபுள்ளய, ஒரு பய எல்லோருக்கும் கல்யாணம் செஞ்சு வச்ச, ரெண்டு வருசத்துல அவ போயிட்டா.
*
அதுக்கப்பறம் நான் மட்டும்தான். மொதல்ல எப்பயாச்சாவதும்,எம் பெரிய பொண்ணாவது வந்து பாக்கும். இப்பெல்லாம் யாரும் வர்றது இல்ல என்றார் நான் கேட்காமலேயே.
*
இப்போது ,எனக்கேதோ அவரிடம் கேட்க வேண்டும்போல் இருந்தது.
*
பையன் நல்லா பாத்துக்கிறாப்லள? என்றதும், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சைரன் ஒலி எழுப்பிக்கொண்டிருந்த அவசர ஊர்தி வாகனத்தையே உத்து் கவனித்துக்கொண்டிருந்தார். *
காதில் விழவில்லையோ என்ற எண்ணத்தில், நான் மீண்டும் பையன் உங்கள பாத்துக்குறாருல்ல என்றேன்.
*
தயக்கத்துடன், ம்ம்ம்ம் என்றவர், சிறிது நேர அமைதிக்கு பிறகு...பாத்துக்கிட்டுதான் இருந்தான். நெலத்தெல்லாம் எம் மருமவ பேருக்கு மாத்துர வரைக்கும்.
*
அதுக்கப்பறம், அவன் ஊருக்கும் வர்றதுல்ல! செலவுக்கும் பணம் கொடுக்கிறதுமில்லா. இருக்கிற ரெண்டு பசுமாடு தான், எனக்கிப்ப கஞ்சியூத்துது என்றபோது, அவர் கண்களில் கண்ணீர் கட்டியிருந்தது.
*
அவன் என்ன பண்ணுவான்! பாவம், அவ ஆட்ன படி ஆடுறான். இப்பக்கூட அவன் வர்றதுக்குல்ல சொல்லாம கெளம்பிவந்துட்டேன்.
*
ஏதோ சாட மாடையா,அவ கெளம்பித்தொலன்னு பேசறப்பையே, கெளம்பிடனும்னு தான் வந்துட்டேன்.
*
இந்த மாதிரி இழுத்துக்கிட்டு கெடக்காமா, படுத்திருக்கும்போதே உசுரு போயிடனும்னு தான் வேண்டிகிட்டிருக்கேன் என்று, இப்போது தூரத்தில் கேட்கும் ஆம்புலன்சு ஒலியை கவனித்தப்படியே பேசியவரிடம், மேற்கொண்டு பேசி எதையும் கிளற வேண்டாமென்று தோன்றியது.
*
நான் இறங்கவேண்டிய, ஈக்காட்டுதாங்கல் நிறுத்தம் வந்தும், ஏனோ இறங்கவில்லை. இவரை கோயம்பேடு அழைத்துசென்று, பேருந்து ஏற்றிவிடவேண்டும் போல் தோன்றியது .அப்படியே அவருடனேயே அமர்ந்துவிட்டேன்.
*
ஏனென்று தெரியவில்லை! அவரருகில் அமர்ந்திருப்பது எனக்கு பிடித்திருந்தது. அவர் மீது வீசிய வியர்வை நாற்றம் இப்போது வா(பா)சமாக மாறிப்போயிருந்தது.
*
கோயம்பேடு வந்தறங்கியதும்,பேருந்து நிலையத்தினுள் உள்ள உணவகத்தை காட்டி, சாப்பிடலாமா என்றேன். வீட்லேயே சாப்ட்டுதான் பஸ் ஏறினேன் என்று, அவர் சொன்ன பதில், பொய்யென்று அவர் முகம் காட்டிக்கொடுத்தது.
*
வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று, என்ன வேணுமோ வாங்கிக்க என்ற என்னை, வெறிக்க பார்த்துவிட்டு,ஒரு தோச மட்டும் போதும் என்றார்.
*
இருவரும் வாங்கி சாப்பிட்டோம். அவர் சாப்பிடும் வரை பேசவே இல்லை.
*
பின்னர், அரசு குடிநீர் ஒன்றை வாங்கிக்கொடுத்து, தஞ்சை செல்லும் பேருந்து ஒன்றின் இருக்கையில் அந்த தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, கிழே இறங்கி நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க எனது பர்சை எடுத்தபோது,
*
என் கையை பிடித்து அவர் கசங்கிய பையில் இருந்த, கசங்காத ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து, தஞ்சாவூர் ஒன்னு என்றார்.
*
டிக்கெட் போக, மீதம் கொடுத்த ரூபாயில் இருந்து, ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து என் கையில் திணித்தார். தயவுசெஞ்சு வாங்கிக்கய்யா! நான் இன்னும் அந்த நெலமைக்கு வரல என்றதும்,
*
கண்முட்டிய கண்ணீருடனும், உயிர் வீங்க வைக்கும் வலியுடனும்,விருவிருவென நடந்து, வெளியில் வந்து பேருந்து பிடித்து என்னுடைய அறையில் நுழைந்தேன்.
*
என் கையில் திணித்துக் கசங்கிய அந்த 50 ரூபாய் நோட்டை , வெறித்து பார்த்தபடியும், அவரை பற்றி எண்ணிப்பார்த்தப்படியுமே, படுக்கையில் நெடுநேரமாக கிடக்கிறேன்,அனைத்தையும் மறந்து.
*
பெற்றோர்களை மதிக்காவிட்டாலும்,மனம் நோகச் செய்யாதீர்கள்...!
*
Here you can find the collection of Tamil stories, Tamil Health Tips, Tamil Jokes, Tamil Spiritual Messages, General knowledges, English stories and Jokes... Enjoy Reading...
Tuesday, May 21, 2019
பெற்றோர்களை மதிக்காவிட்டாலும்,மனம் நோகச் செய்யாதீர்கள்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment