Friday, January 3, 2020

குரங்கு டான்ஸ்...

ஒரு குரங்காட்டி சில குரங்குகளை வாங்கி அவற்றிற்கு நடனமாடக் கற்றுக் கொடுத்தான். அவை மிகவும் அற்புதமான நடனமாடும் திறனைப் பெற்றன.
குரங்காட்டி குரங்குகளை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவற்றை மக்கள் முன் நாட்டியமாட வைத்தான். மக்கள் அவற்றைக் கண்டு மிகவும் ரசித்துப் பாராட்டினர். நடனக் குரங்குகளின் பெருமையை நாட்டின் மன்னன் கேள்விப்பட்டான்.
குரங்குகள் நடனக்காட்சிக்கு நாட்டின் முக்கியமான பிரமுகர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் குரங்குகளின் நடன நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. குரங்காட்டி குரங்குகளுக்கு அழகான பட்டாடை அளித்திருந்தான். மனிதர்களை விட சிறப்பாக, அழகாக குரங்குகள் நடனமாடின.
அதைக் கண்ட மன்னன், “”மனிதர்களைவிட விலங்குகள் எவ்வளவு மேம்பட்டவை. கொஞ்ச காலம் சென்றால் மனிதனை விட விலங்குகளே உயர்ந்தவை என்ற நிலை ஏற்பட்டு விடும் போலிருக்கிறதே…” என்றான் மந்திரியிடம். இதைக் கேட்ட மந்திரி, “”இல்லை மன்னா… குரங்குகள் குரங்குகள்தான். மனிதர்கள் மனிதர்கள்தான்,” என்றான்.

“”அது எப்படி… நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். பழக்கப்படுத்தினால் விலங்குகளும் மனிதரையே விஞ்சிவிடும்,” என்றான் மன்னன்.
அப்போது முன் வரிசையில் அமர்ந்து வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமியின் வேர்க்கடலையில் சிறிது எடுத்து குரங்குகள் முன் வீசினார் மந்திரி.
அவ்ளோதான். ஆடிக் கொண்டிருந்த நடனத்தை விட்டுவிட்டு ஓடிவந்து கடலை பொறுக்குவதில் சண்டை போட்டுக் கொண்டன. குரங்காட்டி எவ்ளோ கத்தியும் கேட்கவில்லை குரங்குகள். இந்தச் சண்டையில் அழகாக உடுத்தியிருந்த பட்டுப்பாவாடை, தலை அலங்காரம் எல்லாம் கலைந்து போனது.
இதைப் பார்த்த அரசன், “”மனிதன் மனிதன்தான். குரங்கு குரங்குதான். பிறவிக்குணம் யாரை விட்டுப் போகும்!” என்று மந்திரியிடம் சொன்னான்...

No comments: